ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்- புகழேந்தி
அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் தரப்பு செல்வது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என அதிமுக முன்னாள் நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K. பழனிசாமிநாளை காலை 10 மணியளவில், சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு சென்று, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுக தலைமை குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக பொதுக்குழு குறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக தலைமை கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இபிஎஸ் தரப்புக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் நாளை அதிமுக அலுவலகத்திற்கு செல்வது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையில் ஈபிஎஸ் தரப்பினரை அதிமுக அலுவலகத்திற்கு அனுமதித்தால் சட்ட ஒழுங்கு சீர்கெடும். அலுவலகத்தில் ஏற்ப்பட்ட சண்டைக்கு சிபிஐ விசாரணை கேட்பதா? இது என்ன கொடநாடு பிரச்சனையா? அதிமுக அலுவலகம் 30 நாட்கள் வரை திறக்க வேண்டாம் என்ற தீர்ப்பை அடுத்த இதுவரை அலுவலகம் செல்லாத ஈபிஎஸ், சிவி சண்முகம் 47 நாட்கள் கழித்து நாளை செல்வது ஏன்? நீதிமன்றம் அதிமுக அலுவலகத்திற்கு யாரையும் செல்ல வேண்டாமென தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நீதிமன்றம் சாவியை வழங்கியதே ஈபிஎஸ் அவர்களை வாட்ச்மேன் வேலையை பார்க்கத்தான் என நினைக்கிறேன். சட்ட ஒழங்கை காக்க வேண்டுமென்றால் தமிழக முதல்வர், அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.