×

ஈபிஎஸ் மீதான ஊழல் புகாரே பிரதமர் அவரை சந்திக்காததற்கு காரணம்- புகழேந்தி

 

எடப்பாடி பழனிச்சாமி மீது அடுத்தடுத்து ஊழல் புகார் வருவதின் காரணமாகவே பிரதமர் அவரை சந்திக்க மறுப்பதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக தினேஷ் குமார் என்பவரும் , மற்றும் புறநகர் மாவட்டங்களான எடப்பாடி, சங்ககிரி   சட்டமன்ற தொகுதிகுக்கான  செயலாளர் ஆக ராஜேந்திரன், 
வீரபாண்டி ,ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளராக ஜெய்சங்கர், மேட்டூர் ,ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளராக ராஜ்குமார், ஆத்தூர் ,கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளராக  பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில் இன்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி தலைமையில், சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புகழேந்தி தலைமையில் ஊர்வலமாக வந்த ஓபிஎஸ் அணியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி, “எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஊழல்வாதி , அவர் தொடர்ந்து ஊழல் வழக்கை சந்தித்து வருகிறார் என்ற காரணத்தினால் தான் பிரதமர் அவர்கள்  எடப்பாடி பழனிச்சாமியை  சந்திக்க  மறுத்து வருகிறார். ரூ.4,500 கோடிக்கான  ஊழல் வழக்கை தற்போது எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார் மற்றும் கோடநாடு கொலை வழக்கு என இப்படி பல வழக்குகளில் சிக்கியுள்ளார். எனவே விரைவில் அவர் மீது வழக்கு பதிவாகி சிறைக்குச் செல்வார். இதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகும்

அதிமுகவில் உள்ளவர்களே எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீர்கள். எடப்பாடி பழனிச்சாமி சமீப காலமாக உளறி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் கோலாலம்பூரில் புகழேந்தி கெடுத்துவிட்டார் என்கிறார், மலேசியாவில் தான் கோலாலம்பூர் உள்ளது. கர்நாடகாவில் உள்ள கோலார் என்பதற்கு பதிலாக கோலாலம்பூர் என்று உளறி வருகிறார்” என விமர்சித்தார்.