×

“எம்பி சீட் தருவதாக மோசடி; இனி அதிமுகவில் எடப்பாடி பேச்சு எடுபடாது”

 

ராஜ்யசபா எம்பி  பதவி கிடைக்கவில்லை என்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என பேசி வருவதாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “உண்மையான போட்டி வந்தால் எடப்பாடி பழனிச்சாமி காணாமல் போய்விடுவார். ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்காததால் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றைத் தலைமை குறித்து பேசி வருகிறார்.இதைத்தான் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகள் பலரும் ஏற்கனவே கூறி வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் இரட்டை தலைமை தான் கட்சிக்கு நல்லது என்று கூறி வந்த ஜெயக்குமார், தற்போது திடீரென ஒற்றைத் தலைமை குறித்து பேசுகிறார்.  அதேபோல மூத்த நிர்வாகி பொன்னையன் அவர்களும் தனக்கு ராஜ்யசபா எம்பி கிடைக்காததால் பாஜகவை விமர்சித்தார். ஆனால் தற்போது அவரும் பாஜகவுக்கு அடிபணிந்து,  வருகின்ற அதிமுக பொதுக்குழுவில் பாஜகவுக்கு ஆதரவாக அவர் கையாலேயே தீர்மானம் நிறைவேற்றப் போகிறார். இது நடக்கத்தான் போகிறது.

ஜெயலலிதா காலத்திலேயே இரண்டு முறை முதல்வராக இருந்தவர்  ஓ.பன்னீர்செல்வம், ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடுவில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் தெரியாது. ஓபிஎஸ் இரண்டு ராஜ்யசபா சீட்டில், விடாப்பிடியாக நின்று ஒரு சீட்டை வாங்கியதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய அடி விழுந்துள்ளது. ஜாதிப் பெயரை வைத்து மிரட்டி  சி.வி.சண்முகம் ஒரு சீட்டை வாங்கிக் கொண்டார். மற்றொரு எம்பி  சீட்  உங்களுக்கு தான் எனக்கூறி   செம்மலை, ஜெயக்குமார்  உள்ளிட்ட பல பேரை எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றி விட்டார். இதனால் இவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகி  விட்டார்கள். எனவே இனி பழனிச்சாமி பேச்சு எடுபடாது. எனவே ஒற்றைத் தலைமை  வந்தால் எடப்பாடி பழனிச்சாமி காணாமல் போய் விடுவார்” என்றார்.