×

"உயிருக்கு பயந்தா பிரதமராவே இருக்க கூடாது" - போட்டு தாக்கிய சன்னி... குமுறும் பாஜக!

 

பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பொறுப்பேற்கும்போது கவனிக்கப்பட்டதை விட இப்போது தான் அனைவர் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறார். பாதுகாப்பு காரணமாக பிரதமர் மோடி பஞ்சாப் நிகழ்ச்சியை ரத்து செய்து டெல்லி திரும்பியதே அதற்கு காரணம். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அடித்து விளையாடுகிறார் சன்னி. தான் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவன் தான், விபத்தினால் முதலமைச்சராகவில்லை என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். விஷயத்திற்கு வருவோம். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்றார்.

ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் மூலம் வருவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்க பயணம் மேற்கொண்டார் பிரதமர். முதலில் ஹூசைன்வாலா பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்திற்கு பிரதமர் மோடி செல்வதாக இருந்தது. அந்தப் பகுதிக்குள் பிரதமரின் கார் நுழையும் முன்பே, அப்பகுதிக்குச் செல்ல தேவையான மூன்று சாலைகளையும் விவசாய அமைப்புகள் முற்றுகையிட்டன. டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் இருந்ததே இதற்குக் காரணம். இதனால் ஒரு பாலத்தில் பிரதமரின் பாதுகாப்பு கான்வாய் 20 நிமிடங்களில் நடு ரோட்டில் நின்றன.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ஆனால் இதற்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் பஞ்சாப் காங்கிரஸ் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் சாடியது. பாஜகவினர் நாடு முழுவதும் காங்கிரஸ் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விளக்கம் தெரிவித்த சன்னி, "பிரதமரின் கான்வாயில் எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை. அவர் ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் கடைசியில் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார். 

பாஜக கூட்டத்திற்கு 7,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள். போராட்டக்காரர்களிடம் பிரதமர் மோடி நினைத்திருந்தால் பேசியிருக்கலாம். நானும் நம்முடைய பிரதமரை மதிக்கிறேன். அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். போராட்டம் செய்வது என்பது மக்களின் உரிமை. அதை தவறு என்று சொல்ல முடியாது” என்றார். ஆனால் மீண்டும் மீண்டும் சன்னியை பாஜகவினர் வம்பிழுக்கின்றனர்.

தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன்னி, வல்லபாய் படேல் கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி பிரதமரை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதில், "ஒருவர் தன்னுடைய அரசியல் பணியை விட தன்னுடைய உயிர்தான் முக்கியம் என்று நினைக்கிறாரோ, அவர் இந்த இந்தியா போன்ற நாட்டில் உயரிய பொறுப்பு எதையும் வகிக்க கூடாது” என்று சர்தார் வல்லபாய் படேல் சொன்ன வார்த்தைகளை பதிவாக போட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சன்னியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.