×

தவறான தடுப்பூசி புள்ளிவிவரங்களை ஒரு மனிதனின் புகைப்படத்துக்கு பின்னால்  மறைக்க முடியாது.. ராகுல் காந்தி 

 

தவறான தடுப்பூசி புள்ளிவிவரங்களை ஒரு மனிதனின் புகைப்படத்துக்கு பின்னால் நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு புது தலைவலியை ஏற்படுத்துள்ளது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்நிலையில், நம் நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு அதிக தீவிர காட்ட வேண்டிய நேரம் என்றும், தவறான தடுப்பூசி புள்ளிவிவரங்களை ஒரு மனிதனின் புகைப்படத்துக்கு பின்னால் நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது என்றும் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டிவிட்டர் கணக்கில், நம் நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் குறித்த புள்ளிவிவரம் ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார். அதில், நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 31.19 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த வாரம் தினமும் சராசரியாக 68 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 2.33 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். 

2021 டிசம்பருக்குள் 60 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தி டிவிட்டரில், புது வகை (கொரோனா வைரஸ்) ஒரு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது. நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்க வேண்டிய நேரம். தவறான தடுப்பூசி புள்ளிவிவரங்களை ஒரு மனிதனின் புகைப்படத்துக்கு பின்னால் நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது என்று பதிவு செய்துள்ளார்.