உள்ளே ரெய்டு - வெளியே தக்காளி சாதம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ். பி. வேலுமணி, கே. சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் கணக்கில் வராத பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கின என்று சொல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிமுக ஆட்சியில் மின்வாரியத் துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான அறுபத்தி ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினார்கள்.
சென்னையில் மட்டும் 14 இடங்களில் ரெய்டு நடந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக 4.75 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி மீது வருமான வரித்துறை அதிகாரிகளை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் . இதனால் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகத்தில் ஒரு இடத்திலும் ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்து வரும் ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டின் முன்பாக அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்தனர். காலையில் அவர்களுக்கு டிபனும் டீயும் வினியோகிக்கப்பட்டது . வீட்டின் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தவர்களுக்கு டெம்போ மூலம் தக்காளி சாதமும் வழங்கப்பட்டது.
வீட்டின் உள்ளே அதிரடி ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போது வெளியே தக்காளி சாதம் வினியோகிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என அறுபத்தி ஒன்பது இடங்களில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் பணமும், 1, 130 கிலோ கிராம் தங்க நகைகளும், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் , செல்போன் வங்கியின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருக்கிறது.