×

"எப்போது அழைத்தாலும் ஆஜராவேன்" - ராஜேந்திர பாலாஜியின் பரபர கடிதம்!

 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில்  ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் ரூ.3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து கைது செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது. தொடர்ந்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து தமிழக போலீஸார் தேடி வந்தனர்.

இதனிடையே அவர் தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.  ஆனால் தங்களிடம் கருத்து கேட்காமல்  ஜாமீன் வழங்கக்கூடாது  என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது.  தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. கடலோர பகுதிகள், வெளி மாநில எல்லைகள் என பல இடங்களில்  முகாமிட்டு தேடி வந்தனர்.  

ஒருவழியாக 20 நாட்களுக்கு பின்னர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் கர்நாடக போலீஸார் உதவியுடன் தமிழக போலீஸ் கைது செய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள்  (ஜனவரி 20 வரை ) நீதிமன்றக்காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் வெளியூர் செல்லக்கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நிபந்தனை விதித்தது.  

இதையடுத்து கடந்த ஜனவரி 13ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி சிறையிலிருந்து விடுதலையானார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று கடிதம் தாக்கல் செய்தார். இச்சூழலில் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி  புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டிருக்கிறார்.