"இதான் சான்ஸ்.. இலங்கைக்கு கண்டிஷன் போடுங்க" - மத்திய அரசுக்கு லிஸ்ட் போட்டு ராமதாஸ் அட்வைஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு ராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடக்கம்தான். வருங்காலத்தில் இலங்கைக்கு இன்னும் கூடுதலான கடனை இந்தியா வழங்கும்.
இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களை அரசியல்ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிடம் தொடர்ந்து கடன்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு, 1987 இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13- ஆவது திருத்தத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் எட்டாக்கனியாகவே உள்ளது.
போருக்கு பின்னர் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதலான அதிகாரங்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ராஜபக்சே சகோதரர்கள் உறுதியளித்தனர். ஆனால், அதன்பின் 13 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகளாகவே உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை அண்டை நாட்டின் விவகாரம் என்று கூறி இந்தியா விலகி நிற்க முடியாது. அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய இந்திய அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும், இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டித்து, இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரவும் இந்தியாவைத் தான் நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு இந்தியா துரோகம் செய்து விடக் கூடாது; இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமையிலிருந்து இந்தியா விலகி விடக் கூடாது.
எனவே, இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்; போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும்படியும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் வென்றெடுத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.