×

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால் இருவரும் இணைந்து உழைக்க வேண்டும் - ரவீந்திரநாத்

 

ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 43வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேனி எம்.பி. ஒ.பி.ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேனி எம்.பி. ஒ.பி.ரவீந்திரநாத், “ஒரு மனிதனுக்கு இதயம் எப்படியோ அதே போல தான் ஒரு இயக்கத்திற்கு இதயமாக இருக்கும் தொண்டர்கள் முக்கியம். தொண்டர்களின் எண்ணத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பதை வகுத்தவர் அதிமுகவின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். அதைத்தான் தற்போது ஓபிஎஸ் நடைமுறைபடுத்தி வருகிறார்.

ஆனால் அம்மா மறைவிற்கு பின் இதயம் போன்ற கப்பலை தொண்டர்கள் இயக்கினாலும், அவர்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு இருவருக்கு அமைந்தது. அதிமுக மீண்டும் ஆட்சியில் அமைய வேண்டுமென்றால் இருவரும் ஒன்றிணைந்து உழைத்து பணியாற்றினால் மட்டுமே முடியும். ஒன்றிணையாமல் வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டே இருந்தால் தொண்டர்கள் உணர்வுகளும் ஒரு அளவு தான் பொறுமையாக இருக்கும். இறுதியில் பொறுத்து பார்த்த தொண்டனின் முடிவே வெல்லும்” என பேசினார்.