×

பச்சை பொய் .. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.. ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

 

 மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு சர்ச்சையானது.   அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த சர்ச்சையை எழுப்பினார். 

 அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மறைந்த முதலமைச்சர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை அரசின் சார்பாக வெளியிட்டுள்ளது.   இதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தனது கண்டனத்தில்,   முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி,  மந்திரிகுமாரி வாயிலாக தனக்கென்று தனி இடம் பெற்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.   ஆனால் உண்மையில் சினிமாவில் நுழைய முடியாத நிலையில் திரைத்துறையில் இருந்து தனது சொந்த ஊரான திருக்குவளை ஓடியவர் கருணாநிதி என்பது வரலாறு.   இதை அறிந்த புரட்சித்தலைவர் தனது தமையனார் அமரர் சக்கரபாணி அவர்களை விட்டு கருணாநிதி அவர்களுக்கு கடிதம் எழுதி மீண்டும் கோவைக்கு வரவழைத்து பட்சிராஜா ஸ்டூடியோவில் மருதநாட்டு இளவரசி படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

 மருதநாட்டு இளவரசி,  மந்திரிகுமாரி படங்கள் வருவதற்கு முன்னரே என்தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் கோலோச்சிய எம்ஜிஆர் கருணாநிதி எழுதியதாகச் சொல்லப்படும் வசனங்களை புரட்சித் தலைவரும் அவரது தம்பி நடிகர் திலகமும் தங்களுடைய படங்களில் உச்சரித்ததால் கருணாநிதி எழுத்துக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு என்று சொல்லியிருந்தார்.

 திரையுலகை சேர்ந்த பலருக்கும் தெரிந்த இந்த உண்மைகள் புரட்சித்தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய இன்றைய முதல் அமைச்சரின் உறவினர் சொர்ணம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அவர் நம்மிடம் இல்லை என்பதுதான் இயற்கையின் சதி என்று சொல்லி இருந்த ஜெயக்குமார்,  இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றைத் திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது என்று கேட்டிருந்தார்.

 இதற்கு  திமுக ஆர். எஸ். பாரதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி- மந்திரிகுமாரி படங்கள் வாயிலாக தனக்கென்று தனி இடம் பெற்றவர் எம்ஜிஆர் என்று குறிப்பிட்டுள்ளதில் என்ன குற்றம் கண்டு பிடித்தார் ஜெயக்குமார்.  இந்த இரண்டு படங்கள் மூலமே எம்ஜிஆர் கலை உலகில் பிரபலம் ஆனார் என்பது ஊரறிந்த உண்மை.  ஆனால் வரலாறு தெரிந்து கொள்ளாத ஜெயக்குமார் இந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே என் தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற படங்கள் மூலம் திரையுலகில் பிரபலம்  என்ற பச்சை பொய் சொல்கிறார் என்கிறார்.

அவர் மேலும்,   டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் குறித்து ஜெயக்குமார் கூறியிருக்கும் செய்திகள் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.  எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்வது இந்த நேரத்தில் அவசியம்.   டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தது கருணாநிதி என்பதற்கு பல்கலைக்கழகத்தில் இருக்கும் திறப்பு விழா கல்வெட்டுதான் சான்று என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.