×

கிறிஸ்துவ பெண்ணை மணந்த தேஜஸ்வி யாதவ்.. கோபத்தில் கொந்தளித்த தாய் மாமன்

 

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த தனது நீண்ட கால தோழி ரேக்சலை திருமணம் செய்தார். இதற்கு தேஜஸ்வி யாதவின் தாய் வழி மாமாவான சாது யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், பீகார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடந்த வியாழக்கிழமையன்று தனது நீண்ட நாள் தோழியான டெல்லியை சேர்ந்த ரேக்சல் கோடின்ஹோவை திருமணம் செய்தார். தேஜஸ்வி யாதவின் திருமணத்துக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தேஜஸ்வி யாதவ் திருமணம் செய்த ரேக்சல் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதே இதற்கு காரணம்.

குறிப்பாக தேஜஸ்வி யாதவின் தாய் வழி மாமா சாது யாதவ் இந்த திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சாது யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: தேஜஸ்வி யாதவ் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு யாதவ் சமூகத்தை அவமானப்படுத்தியுள்ளார். தேஜஸ்வி யாதவின் சகோதரிகள் அனைவரும் யாதவ் சமூகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதை எங்கள் சமூகம் ஏற்கவில்லை.

தேஜஸ்வி யாதவ் தேர்தலில் யாதவர்களின் வாக்குகளை விரும்புகிறார். ஆனால் ஒரு கிறிஸ்துவரை மணந்தார். அவர் இப்போது சண்டிகர் மற்றும் கேரளாவுக்கு சென்று கிறிஸ்துவ வாக்காளர்களிடம் வாக்கு கேட்க வேண்டும். பீகாரில் அவருக்கு எதுவும் மிச்சமில்லை. தேஜஸ்வி யாதவ் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், பீகாரில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர் ஏன் கோருகிறார்? லாலு குடும்பத்தினர் தங்களது மகனின் திருமணத்தை ஏன் மறைத்தார்கள்? திருமணத்துக்கு பிறகு மணப்பெண்ணின் பெயரை கூட வெளியிடவில்லை. மூடிமறைக்கப்பட்ட திருமணத்தில் நிச்சயமாக ஏதோ தவறு இருந்தது. பீகார் ஏதாவது பிரச்சினையை சந்திக்கும் போதெல்லாம் தேஜஸ்வி யாதவ் டெல்லிக்கு ஒடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.