×

ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்துக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. அகிலேஷ் யாதவ் வாக்குறுதி
 

 

உத்தர பிரதேசத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், 3 மாதத்துக்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்தார்.

சமாஜ்வாடி நிறுவனரும், உத்தர  பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் நாடாளுமன்ற தொகுதியான மெயின்புரியில் நடைபெற்ற வெற்றி யாத்திரையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது அகிலேஷ் யாதவ் பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், 3 மாதத்துக்குள் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

மக்கள் தொகை பங்கின் அடிப்படையில் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். வேறொருவரின் உரிமையை பறித்ததாக நாம் அனைவரும் குற்றம் சாட்டப்படுகிறோம். ஆனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் விஷயங்கள் தெளிவாக தெரியும்.சமாஜ்வாடி கட்சி கடந்த காலத்தில் இருந்தது போலவே, அதன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். முலாயம் சிங் யாதவ் சுருக்கமாக பேசுவதற்கு பெயர்  பெற்றவர், அவரது செயல்கள் பேசுகின்றன. 

நிறுவனங்களின் நிறத்தை மாற்றுவதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கு்ம், ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை திறப்பதற்கும் மட்டுமே யோகி ஆதித்யநாத் சிறந்தவர். உங்களுக்கு யோகி  அல்லது யோக்யா (தகுதியான) அரசாங்கம் வேண்டுமா? நான் சித்தப்பா கட்சியை சேர்த்து கொண்டதால் பா.ஜ.க.வின் ஐ.டி., சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பிரிவுகள் டெல்லியிலிருந்து செயல்பட ஆரம்பித்தன. தேர்தல் நெருங்கி வருவதால் தோல்வி பயம் பா.ஜ.க. வேட்டையாடுவதால், இந்த ஏஜென்சிகள் தீவிரமாக செயல்படும். பயப்படுபவர் இறந்து விட்டார் என்று எதற்கும் சமாஜ்வாடிகள் பயப்படுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.