×

இந்துக்களை இழிவுபடுத்துவதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சியின் வாக்குமூலத்தை குறிப்பிட்டு, இந்துக்களை இழிவுபடுத்துவதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்று பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார்.


2008 செப்டம்பர் 29ம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூர் உள்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் சாட்சி ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அவர் நீதிமன்றத்தில், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் அப்போதைய மூத்த அதிகாரி பரம வீர் சிங் மற்றும் மற்றொரு அதிகாரியும், இந்த வழக்கில் யோகி ஆதித்யநாத் மற்றும் இந்தரேஷ் குமார் உள்ளிட்ட 4 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரை தொடர்புபடுத்தி கூறும்படி என்ன மிரட்டினர், துன்புறுத்தினர். ஏ.டி.எஸ். அலுவலகத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்தனர் என்றார். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: சாட்சிகளை மிரட்டி பொய் சொல்ல சதி செய்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்துக்களை இழிவுபடுத்துவதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மாலேகான் வழக்கு வெளியானதை  வைத்து இந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்களுக்கு மனதில் எப்படிப்பட்ட வெறுப்பு இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். இது பெரிய சதி. இந்துக்கள், துறவிகள் மற்றும் உத்தர பிரதேச முதல்வரை கூட அவதூறு செய்ய காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்ல முடியும். காவி பயங்கரவாதம் மிகவும் தீவிரமானது என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் காந்தி தினமும் இந்து மதம் மற்றும் இந்துத்துவா பற்றி பேசுகிறார். அவர்கள் இந்த பிரிவினைவாதத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.