"என்னைக்கு திமுக ஆட்சிக்கு வந்துச்சோ அன்னைக்கே..." - சட்டென சசிகலாவுக்கு வந்த கோபம்!
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை தஞ்சாவூர் வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ளது. சிமெண்டால் செய்யப்பட்ட 4 அடி உயர பீடத்தில் 2 அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த சிலை, காணாமல் போனதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அருகே தள்ளு வண்டியில் சிலை சிதிலமடைந்து கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலையைச் சேதப்படுத்திய சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
குடிபோதையில் வடக்குவாசலை சேர்ந்த சேகர் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை உடைப்புக்கு அதிமுக தொண்டர்கள், தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என சொல்லிக்கொள்ளும் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல், தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது போன்ற சமூக விரோதச் செயல்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் இது போன்று சட்டம் ஒழுங்கை பாதிக்கின்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது கவலையடையச் செய்கிறது. தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை அப்புறப்படுத்திய செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆர், தனது தன்னலமற்ற செயல்களால், எண்ணற்ற ஏழை-எளிய மக்களின் நம்பிக்கை நாயகனாக, இன்றைக்கும் அனைவருடைய உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத தலைவர்.
இது போன்ற விரும்பத்தகாத செயல்களை செய்து எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களான கோடான கோடி உடன் பிறப்புகளின் மனதை காயப்படுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். எம்ஜிஆரின் சிலையை அப்புறப்படுத்திய விஷமிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதுடன், தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.