×

"திமுக அரசை பார்த்தால் அச்சமாக இருக்கிறது" - சசிகலா வேதனை!

 

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளன.  ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகள் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இது ஒருபுறம் என்றால் விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த குறுவை சாகுபடியின்போது இந்த முறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களால் கைவிடப்பட்டது. ஆன்லைன் பதிவு வாயிலாக விற்பது விவசாயிகளுக்கு சிறப்பானதாக இருக்கும் என அரசு நினைக்கிறது. ஆனால் அதில் இருக்கும் சில நடைமுறை சிக்கல்களை அரசு கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் என்ன செய்வது என்றே தெரியாத குழப்பத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலையுற்றுள்ளனர். ஆன்லைன் முறை அல்லாமல் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அரசு, விவசாயிகள் ஆன்லைனில் பதிவுசெய்யும் பொருட்டு ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்தது. ஆனால் இது இன்னும் செயல்பாட்டு வரவில்லை. இச்சூழலில் இதனை கண்டித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே அதிமுக கழக பொதுச்செயலாளர் என்ற லெட்டர் பேடிலேயே அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அதில், "ஆன்லைன் நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளை தவிக்க வைத்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் விஏஓவிடம் சென்று சிட்டா அடங்கல் வாங்கிவிட்டு, அதனை கொள்முதல் நிலையங்களில் கொடுத்தாலே போதும். ஆனால் ஆன்லைன் முறையால் அரசு இ-சேவா மையங்களில் பதிவுசெய்து அதனை விஏஓவிடம் கொடுத்து சிட்டா அடங்கல் பெற்று நெல்லை விற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. ஆன்லைன் பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் படிப்பறிவு பெற இயலாத விவசாயிகளால்  என்ன செய்ய முடியும்?

புரட்சித்தலைவர், அம்மா அவர்கள் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செய்துள்ளனர். ஆனால் திமுக அரசு அணுகுமுறைகளைப் பார்க்கும்போது விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும் விருப்பம் இல்லாதாது போல் தெரிகிறது. உங்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் விவசாயிகளைக் காப்பாற்ற முன் நிற்க வேண்டும். ஆகவே பழைய நடைமுறையின்படியே விவசாயிகள் நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதுபோன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்தி அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.