ரோட்டுல போவோரும் சசிகலாவும் - பொன்னையன் கடும் தாக்கு
அதிமுக ஒற்றை தலைமை தலைமைக்கு வரப்போகிறது என்ற பேச்சு எழுந்திருந்த நிலையில், பொதுச் செயலாளராக மீண்டும் கட்சிக்குள் சசிகலா வரப் போகிறார் என்ற பேச்சு எழுந்திருந்த நிலையில், அதிமுகவுக்கு இரட்டை தலைமைதான். பொதுச்செயலாளர் என்பதே இனி கிடையாது. ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையில்தான் அதிமுக இயங்கும் என்று செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது .
இதுகுறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அதிமுகவுக்கு இரட்டை தலைமை தான் சரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவின் இரட்டை தலைமை குறித்து, அதிமுகவில் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி- ஓ பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவின் கண்களாக இருக்கின்றார்கள். அதிமுக தலைமை சரியானதாக இருக்கும். கண்ணும் இமையும் போல இரட்டை தலைமை சிறப்பாக இருக்கிறது. நகமும் சதையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என யாரும் விரும்ப மாட்டார்கள் என்றார்.
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சொல்லி வருவது குறித்த கேள்விக்கு, சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவும் அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார் என்று தெரிவித்தவரிடம்,
சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்துகிறாரே என்று கேட்க, சாலையில் போவோர் பலர் அதிமுக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் அதிமுக கொடியை பயன்படுத்துகின்றார் என்றார் கடுமையாக.
அன்வராஜாவின் நீக்கம் குறித்த கேள்விக்கு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.