நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணையும்- சசிகலா அதிரடி
சென்னை அசோக் நகரில் உள்ள அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் இல்லத்தில் வி.கே.சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “பண்ருட்டி ராமசந்திரன் எனது மூத்த அண்ணன். எனவே பார்க்க வந்தேன். அரசியல் விஷயமாக இருவரும் கலந்து பேசினோம். அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்தான். அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எம்ஜிஆர் சாதி , மதம் பார்த்து கட்சியை தொடங்கவில்லை , அந்த அடிப்படை கொள்கை எங்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அதிமுக என்பது நிறுவனம் அல்ல , எல்லோருக்குமானது. ஒரே குடும்பத்தை சேர்ந்தோர், அதை நிலைநிறுத்துவது எனது கடமை.
அதிமுகவில் தற்போது உள்ள சிக்கல்கள் அனைத்தும் காலப்போக்கில் சரியாகிவிடும் என்பது திடமான நம்பிக்கை.எம்ஜிஆர் மறைவுக்கு பிறகும் இப்படி நடந்தது , பின்னர் ஒரு காலத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்தனர், அது போல மீண்டும் நடக்கும். நீங்கள் குறிப்பிடுவது போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூட அனைவரும் இணையக் கூடும். தொண்டர்கள் நினைப்பது தான் எனது செயல்பாடாக இருக்கும். எனது பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணைவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தொண்டர்களின் எண்ணம் அதுதான்” எனக் கூறினார்.