×

"தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி" - சொல்வது சசிகலா!

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 105ஆவது பிறந்தநாள் இன்று அதிமுக தலைவர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.

நினைவில்லத்தைச் சுற்றிப்பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "இந்த நன்னாளில் ஒற்றுமையாக இருந்து, எம்ஜிஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும், தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டுவருவோம்" என்று கூறினார்.