ராஜேந்திரபாலாஜிக்கு ரகசிய உதவி - அந்த 2 பேரையும் தூக்கிய தனிப்படை
தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு உதவி செய்து வந்த இரண்டு பேரை கைது செய்திருக்கிறது தனிப்படை போலீஸ். இதையடுத்து, விரைவில் ராஜேந்திரபாலாஜி கைதாவார் என்கிறது போலீஸ் வட்டாரம்.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி ,பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரு வேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது . ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க தலைமறைவாக இருந்து கொண்டே, முன் ஜாமீன் கோரியிருக்கிறார். அதற்குள் அவரை பிடித்துவிடும் முயற்சியில் 6 தனிப்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீசார்.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி இருக்கிறது காவல்துறை . ராஜேந்திரபாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.
தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி எப்படியும் முன்ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்று தீவிரமாக இருப்பதால் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தங்கள் தரப்பை கேட்காமல் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து புகார்களும் குவிந்து வருகின்றன. மேலும் 3 புகார்கள் ராஜேந்திரபாலாஜி மீது கூறப்பட்டிருக்கிறது. சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூய மணியின் மனைவி குணா தூயமணி வேலை வாங்கி தர வேண்டி 17 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன் என்பது புகார் கொடுத்திருக்கிறார். மதுரை வில்லாபுரம் காமராஜர் நகர் மூணாவது தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக ஏழு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜோசப் என்பவர் இந்து சமய அறநிலையத் துறை அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக சொன்னதால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு ஏமாந்து நிற்பதாக புகார் கூறியிருக்கிறார். போலீசார் இம்மனுக்களில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முகாந்திரம் இருந்தால் விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
மதுரை ஆவினில் பணி நியமனங்கள் உள்ளிட்ட புகார்கள் குறித்து சென்னை ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றார்கள். இந்த முறைகேடுகளுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இரண்டு பேர் தொடர்பில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர்களையும் போலீசார் கைது செய்து விட்டதாகவும் தகவல் மேலும் அந்த இருவரையும் கைது செய்து விட்டதால் விரைவில் ராஜேந்திரபாலாஜி பிடிபடுவார் என்றும் தகவல்.
ராஜேந்திரா பாலாஜி தலைமறைவாக உள்ளதால் அவருக்கு அவருடன் தொடர்பில் இருந்த அதிமுகவினரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்கள் . அப்போதுதான் திருப்பத்தூர் அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரனையும், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ராஜேந்திரபாலாஜியை தனிப்படையினர் நெருங்கி விட்டதாகவும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்.