×

"ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்கும் அதிமுக?" - செல்லூர் ராஜூ கொடுத்த க்ளூ!

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. சட்டம் இயற்றப்பட்டு வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடை அரசு செலுத்தியது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என உத்தரவிட்டார். 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் என்றும் ஆணையிட்டார்.

இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவால் வேதா இல்லம் நேற்று திறக்கப்பட்டது. இச்சூழலில் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அதிமுக தரப்பு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக சார்பாக மேல் முறையீடு செய்வோம். கட்சியின் நிதியை பயன்படுத்தி அந்த இடத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இடம் வேதா இல்லம். அங்கு தான் அவர் உலகத் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை அனைவரையும் சந்தித்தார். எனவே அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அங்கு வந்து இல்லத்தைச் சுற்றி பார்க்க இந்தியா மட்டுமல்லாமல் உலக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். தீபா, தீபக் இருவரும் அவர்களாக முன்வந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அனுமதி அளித்தால் வரலாறு அவர்கள் குறித்து பேசும். வரலாற்றில் நிலைத்து இருப்பார்கள்” என்றார்.