×

"பாஜகவுடன் ஸ்டாலின் ரகசிய உறவு; காரணம் என்ன தெரியுமா?" - கொளுத்தி போட்ட செல்லூர் ராஜூ!

 

திருமலை நாயக்கரின் 439ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி ஆகிய இருவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட நாயக்க மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்த வரவில்லை” என்றார்.

அமைச்சர்கள் வந்திருந்தும் இப்படி பேசியது செய்தியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. செல்லூர் ராஜூ தெரியாமல் சொல்லியிருப்பார் என விட்டுவிட்டார்கள். தொடர்ந்து பேசிய அவர், "பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை என சொல்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார வாகன அணிவகுப்பு இல்லை. தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்து வருகிறார். வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை.

தமிழர்களின் பணியை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்காது என திண்ணமாக கூறுகிறேன். எந்தவொரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம், பெருமையை உலகுக்கு சொன்னதில்லை. பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார். பிரதமர் குறித்து கனிமொழி எந்த நிலைபாட்டில் கூறுகிறார் என தெரியவில்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார்” என்றார்.