×

மோடி தமிழகம் வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாதா? பாஜக விளக்கம்

 

கோயில் வருமானங்கள் மூலம் மீன் மார்க்கெட் கட்டப்படும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து மீன் சந்தையை கட்டிக் கொடுப்பது அரசின் வேலையா?  திருக்கோயில்களின் வேலையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  ஆனால் மீன் சாப்பிடுபவர்கள் யாரும் இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை சொன்னதாக செய்தி பரவியது .

இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது .  அது குறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர்,  ‘’அதீத பொய்களை அவிழ்த்துவிடுவது கழக ஊடகங்கள்-கழக ஜால்ரா மீடியா வழக்கமாகி வருகிறது.  அண்ணாமலை சொல்லாததை சொன்னதாக தலைப்பு செய்தி. உள்ளே 4 நிமிட வீடியோவில் ஒரு வார்த்தை அது பற்றி இல்லை. நம்பகத் தன்மையை இவர்கள் இழந்து ரொம்ப நாளாகிவிட்டது’’ என்று தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில்,  வரும் 12-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தருகிறார்.   மதுரையில் நடக்கும் பொங்கல் விழா மற்றும் 11 கல்லூரிகள் திறப்பு விழா தொடர்பாக அவர் தமிழகம் வருகிறார்.   இதை முன்னிட்டு எஸ். ஆர். சேகர்,   ‘’ மோடி தமிழகத்திற்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது. மோடி வரும் போது அசைவம் சாப்பிடுகிறவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’’ என்று சொன்னதாக ஒரு சர்ச்சை பதிவு  வலைதளங்களில் வைரல் ஆனது.

 ஆனால் இதுகுறித்து எஸ்.ஆர்.சேகர், 
 ‘’நான் சொல்லாததை
நினைக்ககூட செய்யாத
விஷயத்தை சொல்லி

என்னை 
பிரபலமாக்கத்
துடிக்கும்

என் எதிர்முகாம்
நண்பர்களுக்கு
நன்றி! நன்றி! ’’என்று தெரிவித்திருக்கிறார்.