×

எங்கள் கட்சியில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்?- அதிமுக

 

எங்கள் கட்சியில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்? என அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமசந்திரன் பாஜகவை விமர்சித்துள்ளார்.


அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ . பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை பசுமைவழிச் சாலையில் தனித்தனியே சந்தித்து பேசிய பிறகு சென்னை கமலாலயத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி. டி. ரவி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சி.டி.ரவி, “1972 ல் எம்ஜிஆர் தீய சக்திகளை வீழ்த்த அதமுகவை உருவாக்கினார் , இப்போதும் அதற்கான தேவை உள்ளது . ஒரு குடும்ப நலத்திற்காகவும் ,  தமிழக மக்களுக்கும் தமிழர்களின் கலாசரத்திற்கும் எதிராகவும் திமுகவின் செயல்பாடு உள்ளது. தமிழ் மக்கள் திமுகவிற்கு எதிராக உள்ளனர். திமுகவினர்  கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். திமுகவினர் தங்களது பண பலம் , ஆட்சி அதிகாரத்தை  ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தி வருகின்றனர். திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுகவே தேவை.  ஈரோடு தேர்தல் ,  தமிழக பிரச்சனைகள் குறித்து இருவரிடமும் பேசினோம் , இருவரையும் சமாதனப்படுத்த முயற்சித்தோம்.பிப்ரவரி 7 ம் தேதி  வரை காத்திருப்போம்.  இருவரும் இணைய வேண்டும் என்பதே எங்கள் விரும்பம்.. 7 ம் தேதி வரை நேரம் இருக்கிறது .  தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிமுகவினர் இருக்கின்றன. தமிழக நலன் கருதி அதிமுக அணிகள் இணைய வேண்டும்” எனக் கூறினார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமசந்திரன் பாஜகவை தனது முகநூல் பக்கத்தில், “எந்த கட்சி என்றாலும் அந்த கட்சிக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள், தலைவர்கள் இருக்கிறார். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் எப்படி எங்களை வழிநடத்த வேண்டுமென்று! அதை பாஜக சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவே தேசிய தலைமையிலான கூட்டணி. பாஜக தேசிய கட்சி என்பதால் எதை வேண்டுமானாலும் கூறலாமா? தேசியக் கட்சி என்றால் எங்களை என்ன வேண்டுமானாலும் ஆணையிடுவீர்களா? கர்நாடகாவை எப்படி ஆள வேண்டும் என்று நாங்கள் சொன்னால் சி.டி.ரவி ஒப்புக்கொள்வாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.