×

பிரதமரின் பாதுகாப்பு மீறலால் காங்கிரஸில் ஆதாயம் தேட முயன்றது யார்?.. ஸ்மிருதி இரானி கேள்வி
 

 

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு மீறலால் காங்கிரஸில் ஆதாயம் தேட முயன்றது யார்? என்று ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5ம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.  ஆனால் பிரதமர்  செல்லும் பாதையில் போராட்டக்காரர்கள் சாலையை மறித்தனர். இதனால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கன்வாய் வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் நின்றது. இதனையடுத்து பிரதமர் மோடி தனது பஞ்சாப் பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார்.


மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஜனவரி 5ம் தேதி பிரதமரின் பாதுகாப்பு மீறப்பட்டதை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். பிரதமரின் பாதுகாப்பு மீறலால் காங்கிரஸ் கட்சியில் யார் பலன் அடைந்தார்கள். பிரதமரின் பாதுகாப்பு நெறிமுறை மற்றும் மீறல் குறித்து பஞ்சாப் முதல்வர் (சரண்ஜித் சிங் சன்னி) தனிப்பட்ட குடிமகனிடம் (பிரியங்கா காந்தி) ஏன் விளக்கினார்?. 

பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறலில் ஒரு தனிப்பட்ட குடிமகன் ஏன் ஆர்வமாக இருந்தார். பஞ்சாப் காங்கிரஸ் தலைமையிலான அரசின் தீவிர ஒத்துழைப்பால் பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டுமென்றே மீறப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பை மீறியதன் மூலம் காங்கிரஸில் ஆதாயம் தேட முயன்றது யார்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.