×

மௌன சாமியாராக இருக்கிறார் ஸ்டாலின்! அமித்ஷாவிடம் எடப்பாடியார் புகார்

 

 உலகத்திலேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டு மின்கம்பியை திருடும் கட்சி திமுக மட்டும் தான்.  ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்த கும்பல் திமுக தான் என்று கூறியுள்ளார்  முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார்.

 மதுரையில் புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ உரப்பனூர் இந்திரா காலனியில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது .  முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இந்த முகாமை தொடங்கி வைத்து பேசினார் .

அப்போது,   சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேசிய போது அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்று கேட்டார் முதல்வர் ஸ்டாலின்.  அந்த கேள்விக்கு எடப்பாடியார் ஆதாரத்தோடு விளக்கிப் பேசினார்.

 இப்போது அரசு அலுவலரை பட்டப் பகலிலேயே வெட்டி சாய்த்து இருக்கிறார்கள்.  மண்ணை திருடக்கூடாது என்று சொன்னவர் வீட்டில் மண் விழுந்து விட்டது.   சேலம் மாவட்டத்தில் மணல் திருடுபவர்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்த அவரை விரட்டிச் சென்று வெட்டி சாய்க்க முன்று உள்ளார்கள்.

 ஒரு குழந்தையை திமுக கவுன்சிலர் பாலியல் பலாத்காரம் செய்தார்.  இதற்கு நியாயம் கேட்டால் கட்சியில் நீக்கப்பட்டதாக நடமாடினார்கள்.  கொலை, கொள்ளை வழிப்பறி செய்பவர்கள் திமுக காரர்கள் . 

மின்சாரத்தை கட் செய்து விட்டு அலுமினிய வயர்களை ஒருவர் கொள்ளையடிக்கிறார்.  முதலமைச்சர்,  பால்வளத்துறை அமைச்சருடன் அவர் போட்டோ எடுத்து உள்ளார்.  உலகத்திலேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டு மின்கம்பியை திருடுகிற கட்சி திமுக மட்டும் தான் . ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்த கும்பல் திமுக .  மக்கள் இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு கொதித்து போய் இருக்கிறார்கள் என்றார்.

அவர் மேலும்,   2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததால் திமுக பத்தாண்டுகள் வனவாசம் போனது.  இப்போது முப்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.  இது பொய் என்றால் காவல்துறையிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை?  இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.  இதைத்தான் எடப்பாடியார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துவிட்டு வந்துள்ளார்.  இந்த 30,000 கோடி ரூபாய் விவகாரத்தில் வாய் திறக்காமல் மௌன சாமியாராக இருக்கிறார் ஸ்டாலின் என்று ஆவேசப்பட்டுள்ளார்.