×

மாஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைவதை ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்-  சேகர்பாபு

 

தொழிலதிபர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இயங்கி வந்தார்.  பின்னர் அவர் தேமுதிகவில்  இணைந்து எம்எல்ஏ ஆனார்.  அதன்பின்னர் அதிமுகவிற்கு வந்து அமைச்சரானார்.    தற்போது அவர் திமுகவில் இணைய விருப்பதாக அவரது பேச்சின் மூலம் சலசலப்பு எழுந்திருக்கிறது.   இதுகுறித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு விளக்கம் அளித்திருக்கிறார்.

 மகாகவி பாரதியாரின் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே ஜெதி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே . சேகர்பாபு இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.   இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார்.

 விழாவில் அவர் பேசும்போது,    2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டு தெரிவித்தார்.   இதையடுத்து கூட்டத்தில் மாஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைகிறார் என்ற சலசலப்பு எழுந்தது.

 இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்காலத்தில் திமுகவினரோடு இணைந்து செயல்படுவாரா? என்று கேள்வி எழுப்பினர்.

 அதற்கு சேகர்பாபு ,  அனைத்து தரப்பினரும் முதலமைச்சரை பின்பற்றும் அளவிற்கு அவரது செயல்பாடு உள்ளது.   அந்த வகையில் யார் வேண்டுமானாலும் திமுகவில் இணைந்து செயல்படலாம்.   அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் எதிர்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் என்று விளக்கம் அளித்தார்.