ஜூலை 11-ம் தேதி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழ் மகன் உசேன்
ஒற்றைத் தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என அக்கட்சி அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், “42 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும், 62 ஆண்டுகள் பொது சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன், அதிமுகவை நல்ல முறையில், ஒருங்கிணைத்து கொண்டு செல்வேன். தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் ஒற்றை தலைமையை தான் விரும்பிகிறார்கள். மேலும், எடப்பாடி தான் ஒற்றை தலைமையாக வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஜூலை 11ம் தேதி அந்த நல்ல செய்தியை அனைவரும் கேட்க போகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சியை சென் ஜார்ஜ் கோட்டையில் அமைக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். செம்மையாக, ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்