×

பாஜக, பாமக, அதிமுக காங்கிரஸ், விசிக என அனைத்தும் எதிர்க்கட்சியே- தம்பிதுரை

 

நீட் தேர்வு தேவையில்லை என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்று அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பொறியியல் கல்லூரி திறக்க அனுமதி அளித்தார். தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல கல்லூரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறக்கப்பட்டன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது இந்த மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்வியில் மேம்பட்டுள்ளது.நீட் தேர்வு என்பது போட்டி தேர்வா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வுகள் தான் போட்டி தேர்வுகள்.நீட் தேர்வு என்பது போட்டி தேர்வு அல்ல. எனவே அ.தி.மு.க. நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

தமிழகத்தில் ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளுமே எதிர்க்கட்சிகள் தான். பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என அனைவருமே எதிர்க்கட்சிகள் தான். ஏன் என்றால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கட்சிக்கோ, விடுதலை சிறுத்தைகளுக்கோ அவர்கள் மந்திரி பதவி வழங்கவில்லை. அதனால் அவர்களும் எதிர்க்கட்சிகள் தான்.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 66 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று 40 சதவீத வாக்குகளை நாங்கள் வைத்துள்ளோம். அதனால் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால் போலீசார் உள்பட பலரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு தமிழக அரசு செவி சாய்க்கும் என்று நான் நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கு கெட்டு விட்டது என்று அ.தி.மு.க.தொடர்ந்து கூறி வருகிறது. எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள் என புறக்கணிக்காமல் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.