“5 ஆண்டில் செய்யவேண்டியதை ஒரே ஆண்டில் செய்துவிட்டீர்களா? அப்ப ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டு கிளம்புங்க”
அதிமுக சர்வாதிகார கட்சி அல்ல ஜனநாயகக் கட்சி கட்சி நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பிறகே மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை பிரச்சினைகள் தீர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனபள்ளி கிராமத்தை 2019 -2020 ஆம் நிதியாண்டுக்கான கிராமமாக தத்தெடுத்தார். இன்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தம்பிதுரை கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் கட்டிடங்கள் போன்ற வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கிராம மக்களிடமிருந்து கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வரட்டனபள்ளி கிராமத்தை தத்தெடுத்து கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சனையும் இல்லை. ஓபிஎஸ் இபிஎஸ் வேட்பாளரை தேர்வு செய்வதில் மோதல் கருத்து வேறுபாடு என்பது சில ஊடகங்கள் திணிக்கின்றனர். அதிமுக சர்வாதிகார கட்சி அல்ல, ஜனநாயக ரீதியான கட்சி அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளரிடம் கலந்து ஆலோசனை செய்து வேட்பாளர் அறிவிக்கப்படும். தேர்தலுக்காக இன்னும் அறிவிப்பு வரவில்லை. அதற்கு முன் ஒரு கட்சி வேட்பாளர் அறிவித்து விட்டதால் பிற கட்சிகளும் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. இன்னும் பாஜக கட்சியில் கூட வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. விரைவில் ஆலோசனை செய்யப்பட்டு தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டத்திற்கு நிதி ஆதாரங்களை பெற்று வந்தோம். தற்போது தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்து தமிழக வளர்ச்சிக்கும் நிதி ஆதாரம் கோரி வருகிறார். இந்த விஷயத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழக வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வருகிறோம். நிதி ஆதாரம் இல்லாமல் எந்த அரசும் செயல்பட முடியாது. தமிழக வளர்ச்சிக்கு நிதி ஆதாரம் பெற அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சித் திட்டத்தை ஓராண்டில் செய்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது அரசியலுக்கு நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் ஏற்புடையதல்ல. 5 ஆண்டு கால ஆட்சியில் ஓராண்டில் அனைத்தும் செய்துவிட்டால் மீதமுள்ள நான்கு ஆண்டுகள் என்ன செய்வார்கள்? அப்படி செய்திருந்தால் அதிமுகவிடம் ஆட்சியை விட்டுவிட்டு செல்லுங்கள்” எனக் கூறினார்.