×

"திமுகவுக்கு அது வந்திருச்சி.. இனி சோழி முடிந்தது" - மாஜி அமைச்சர் தங்கமணி சுளீர்!

 

நாமக்கல்லில் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தங்கமணி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அந்தந்த மாவட்ட அதிமுக தலைமை அலுவலகங்களில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை நடத்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நாமக்கலில் இன்று வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பால் தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கடைகளை மூடினார். பின்னால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றபோது 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். 

பள்ளிபாளையம் நகராட்சியில் இதுவரை டாஸ்மாக் கடைகள் இருந்ததில்லை. தற்போது இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திமுக அரசு சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் அவர்களே நீதிமன்றம் சென்று தேர்தலைத் தள்ளிவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்" என்றார்.