ஓபிஎஸ்க்கு தனியரசு நேரில் ஆதரவு!
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இருவருக்கும் அவரது ஆதரவாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக இயங்கிவரும் நிலையில் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றினால் சட்டப்படி அது செல்லாது. அது அதிமுக செயற்குழு தீர்மானத்திற்கு எதிரான ஒன்றாகிவிடும் என்று ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் சொல்லிவருகின்றனர்.
ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் என்று அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எச்சரித்துள்ளார். இதற்கிடையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி , ஓபிஎஸ் -இபிஎஸ் இரண்டு பேருமே அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் திட்டமிட்டபடி ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்திருக்கிறார். யார் வருவார் என்ற கேள்விக்கு அதிமுகவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். இந்த சூழலில் ஓ .பன்னீர் செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் தனியரசு.
ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் தனியரசு. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர் ஓபிஎஸ் . ஆனால் எடப்பாடி அப்படி இல்லை . அவர் சூழ்ச்சிக்காரர் என்றார்.
அவர் மேலும், அதிமுக செயல்பட துணை நின்றவர் ஓபிஎஸ். சுயநலம் இல்லாமல் செயல்பட்டு வந்தவர் ஓபிஎஸ். பகைவரை கூட மன்னித்து அரவணைத்து செயல்படக்கூடியவர் ஓபிஎஸ். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது போல் ஓபிஎஸ்சையும் கட்சியை விட்டு நீக்க நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான் கட்சியை தனது தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறார். அப்படி அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வந்தால் அது ஓபிஎஸ் தலைமையில் தான் வரவேண்டும். இத்தனை முறை விட்டுக் கொடுத்தது போல் இந்த முறை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என்று ஓபிஎஸ்சிடம் வலியுறுத்தி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.