×

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 2வது முறையாக ஹரியானா அமைச்சரவை விரிவாக்கம்..
 

 

ஹரியானாவில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

2019ல் நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 40ல் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதனையடுத்து ஜன்நாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜன்நாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் உள்ளனர்.  முதல்வர் மனோகர் லால் கட்டார்  பதவியேற்ற 2 வாரங்களுக்கு பிறகு தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.

தற்போது முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவையில்  முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட மொத்தம் 12 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஹரியானா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் நேற்று செய்தி வெளியிட்டது.

ஹரியானா அமைச்சரவையில், ஜே.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் பாப்லி, பஞ்ச்குலாவின் எம்.எல்.ஏ. கியான் சந்த் குப்தா மற்றும் ஹிசார் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கமல் குப்தா ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல். ஹரியானா முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரியானா அமைச்சரவை 2021 டிசம்பர் 28 அன்று (இன்று) விரிவுபடுத்தப்படும். பதவியேற்பு விழா ஹரியானா ராஜ்பவனில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று பதிவு செய்துள்ளது.