×

அமைச்சர் சொன்ன பதில்! விழுந்து விழுந்து சிரித்த முதல்வர்
 

 

ஆசை இருக்கு; ஆனா காசு இல்ல என்று அமைச்சர் ஐ. பெரியசாமி சொன்னபோது அவையில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.  

 தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது  பேசியவர் ,  ஊராட்சி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் .  அதை நிறைவேற்றும் விதமாக 244 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

 தொடர்ந்து அது குறித்து பேசியவர்,   388 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வழங்க ஸ்கார்பியோ கிளாசிக் கார் வழங்கப்பட்டிருக்கிறது.  19 ஊராட்சி தலைவர்களுக்கு டாட்டா சபாரி கார் வழங்கப்பட இருக்கிறது என்று கூறினார். 

 இதைச் சொல்லிவிட்டு முதலமைச்சருக்கு எவ்வளவு பெருந்தன்மை பாருங்க .  நிதி மட்டும் இருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வார்.  இது அனைவருக்குமான அரசு என்றார்.

 அப்போது சட்டப்பேரவையில் இருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுக்கும் கார் கொடுங்கள் என்று குரல்  எழுப்பினர்.  இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி,  மனசு கடலை போல விரிந்து கிடக்கிறது.  ஆனால் நிதி ஆதாரம்தான் சுருங்கி கிடக்கிறது.  இதற்கு யார் காரணம் என்று நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். 

 அமைச்சரின் இந்த பதிலை கேட்டு அவையில் இருந்த முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தார்கள் . அவையில் எழுந்த இந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.