×

பாஜகவுக்கு ஆதரவு இல்லாததால் போன வேகத்திலேயே திரும்பிய எம்.எல்.ஏ.

 

 பாஜகவில் இணைந்த அதே வேகத்திலேயே மீண்டும் காங்கிரசுக்கு  திரும்பி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அந்த எம்எல்ஏ. 

 பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது .  இந்த நிலையில் ஹர்கோபிந்த்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பல்வீந்தர் சிங் லட்டி திடீரென்று கடந்த இருபத்தி எட்டாம் தேதி அன்று பாஜகவில் இணைந்தார்.  அவருடன் பதே ஜங் சிங் பஜ்வா காங்கிரஸ் எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்தார்.

 தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென்று பாஜகவில் இணைந்ததால் காங்கிரசுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் பாஜகவில் இணைந்து ஆறு நாட்களிலேயே பாஜகவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்து உள்ளார் பல்வீந்தர் சிங் லட்டி.

இதற்காக சண்டிகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா,  பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஆகியோர் முன்னிலையில் பல்வீந்தர் சிங் லட்டி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

 அப்போது பேசிய பல்வீந்தர் சிங் லட்டி,   தனது ஆதரவாளர்களும் பொதுமக்களும் பாஜகவில் சேரும் தனது முடிவு குறித்து கேள்வி எழுப்பிய போது அந்த முடிவை அவர் இரண்டாவது முறையாக யோசித்ததாகவும்,  தனது தொகுதி விவசாயிகள்,  தொழிலாளர்களின் ஆதரவு பாஜகவுக்கு துளியும் இல்லை என்பதை உணர்ந்ததால் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  

 பாஜகவுக்கு ஆதரவு இல்லாததால் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்திருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.