புலி பூனையாக மாறிவிட்டது!இனியாவது திருந்துவாரா?- பாஜக
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு ஆடியோக்களை வெளியிட்டிருக்கிறார். முதல் மற்றும் இரண்டாவது டேப் இரண்டிலுமே முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனை கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார் பிடிஆர். இவர்கள் இரண்டு பேரும்தான் கட்சியே என்று ஆகிவிட்டது. இவர்கள் ஒரே ஆண்டில் சேர்த்த பணம் குறித்தும் போட்டுடைத்திருக்கிறார் பிடிஆர்.
ஆனால், அது தனது குரல் அல்ல. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோவில் உள்ளது உள்ள குரல் என்னுடையது இல்லை . நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர் . இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று தனது விளக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சபரீசன் என் வழிகாட்டி! உதயநிதி நம்பிக்கை நட்சத்திரம் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, பிடிஆர் தியாகராஜன் ஆடியோவை வெளியிட தயங்கிய தமிழக ஊடகங்கள் அவரின் மறுப்பை மட்டும் வேக வேகமாக வெளியிட்டு திமுகவுக்கு தங்களின் விசுவாசத்தை காட்டிக் கொள்வதில் வியப்பில்லை. ஆனால், வெட்கக்கேடு. கோழைத்தனமான பதில், தயக்கத்துடன் பயத்தோடு கூடிய விளக்கம். இந்த மனிதரின் இயல்புக்கு எதிரான வசனம். இன்னும் சில ஆடியோக்கள் வெளி வரும் போது மேலும் கதை, திரைக்கதை, வசனத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்.
மேலும், நான் யார் தெரியுமா? என்னை மாதிரி படிச்சவன் யாரு இருக்காங்க? நாங்க பரம்பரை பணக்காரங்க. எனக்கு தெரியாத விஷயமே இல்லை. உலக பொருளாதாரம் தெரிஞ்சவன் நான் என்றெல்லாம் பெருமை பேசியவர், இன்று தனது வழிகாட்டி. ஆலோசகர் என்றெல்லாம் தன் தரத்தை காற்றில் பறக்க விட்டு புலம்ப வைத்து விட்டாரே அண்ணாமலை என்கிறார்.
அய்யோ பாவம் பூனைக்குட்டி என்று சொல்லும் நாரயணன், குறிப்பு : நான் தனி மனித விமர்சனத்தை விரும்புவதில்லை. ஆனால், இந்த நபர் எப்போதும் மற்றவர்களை, தன்னை விட தரத்தில் குறைந்தவர்களாக, அந்தஸ்தில் குறைந்தவர்களாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தன்னை புலியாக எண்ணிக்கொண்டிருந்தவர். இன்று பூனைக் குட்டியாக போனது ஒரு நல்ல பாடத்தை புகட்டியிருக்கும். தன் வினை தன்னை சுடும். இனியாவது திருந்துவாரா?