×

முருகன் மீது அன்பு உண்டு - அரங்கை அதிரவைத்த முதல்வர் ஸ்டாலின்

 

 திமுகவின் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் மகள் அருணாவின் திருமணம்  இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.   திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் தலைமை ஏற்று இத்திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்திற்கு பின்னர் மணமக்களை வாழ்த்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,   ‘’ மணமக்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு முன்பாக வீட்டுவசதி வாரிய தலைவராக பொறுப்பேற்று  இருக்கக்கூடிய பூச்சி முருகனுக்கு உங்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என்றார்.

 முதல்வர் நேற்று 22ஆம் தேதியன்று தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக பூச்சி முருகனை நியமித்துள்ளார்.  அதற்காகத்தான் இன்றைக்கு நடந்த திருமண விழாவில் அவருக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 தொடர்ந்து பேசிய முதல்வர்,   ’’எல்லோரும் அவரை பூச்சி முருகன் என்று தான் அழைப்பார்கள் சிலர் பூச்சி என்று அழைப்பார்கள்.  விஷப் பூச்சிகளை, நச்சுப் பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்க பணியாற்றிவருகிறார் பூச்சி முருகன்’’ என்றவர்,    ‘’ நான் எப்போதும் அவரை முருகன் என்று தான் அழைப்பேன்.  ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு பாசம் உண்டு’’ என்று பேசிய போது,     கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது.

 முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருந்தது என்பதால்,  அதை உணர்ந்து தான் முதல்வர் அப்படி பேசுகிறார் என்பதை அறிந்து அந்தக் கைதட்டல்கள் எழுந்தன. 

முருகன் மீது நமக்கு அன்பு உண்டு பாசம் உண்டு என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின்,   மேலும், ‘’ அண்ணன் துரைமுருகனை பார்த்தால் இது உங்களுக்கு புரியும்’’ என்று சொன்னார்.