×

மீண்டும் பாஜகவை சுமப்பதற்கு இது பயன்படுமேயானால்... எடப்பாடிக்கு அறிவுறுத்தும்  திருமா

 

அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமியின் வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. இவ்வாய்ப்பு மீண்டும்  பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே என்கிறார் திருமா.

எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும்,  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,  அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும்,  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது . எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து,  இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் .

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  ‘’அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள்.   இவ்வாய்ப்பு மீண்டும்  பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’’ என்று கூறியிருக்கிறார்.

அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று முயன்று வருகிறது பாஜக என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.  அதற்கேற்றார் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக  பாஜக போட்டியிடுகிறதா,  இல்லை அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறதா என்ற நிலை தெரியாமல் இருந்தபோது,  பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் அதில் ஒன்றும் தப்பில்லை என்று ரொம்ப கெத்தாக சொன்னார் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.  

 அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் இரண்டு அணிகளும் வெற்றி பெற இணைந்து போட்டியிட வேண்டும்.   இல்லாவிட்டால் பாஜக போட்டியிடும்.  பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலையை எடுத்திருந்தனர்  அண்ணாமலையில் ஆதரவாளர்கள்.   ஆனால் பாஜகவின் முடிவுகளையும் பாஜகவின் எண்ண ஓட்டத்தையும் எதையுமே கண்டு கொள்ளாமல் தனது அணி வேட்பாளரை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.  

ஓபிஎஸ் அணி குறுக்கே நின்றாலும்,   எடப்பாடி பழனிச்சாமி அணிக்குத்தான் இரட்டை இலை சின்னத்தையும் கிடைக்கச் செய்தது உச்ச நீதிமன்ற தீர்ப்பு.  இதை அடுத்து வேறு வழி இன்றி எடப்பாடி பழனிச்சாமி அணி ஆதரவாளருக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர் பாஜகவினர்.   இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்றும்,  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு  செய்யப்பட்டது செல்லும் என்றும் உச்சநீமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதால் அதிமுகவுக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.    இடைத்தேர்தலில் பாஜகவை கண்டு கொள்ளாது ஆளுமைத்தனமாக எடுத்த முடிவை போலவே அடுத்தடுத்தும்  எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும் என்பதையே திருமாவளவன் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.