×

இதனால்தான் காந்தி எடுத்த வாந்தியை வரவேற்கிறேன் - அண்ணாமலை பதிலடி

 

அவனெல்லாம் ஒரு தலைவனா? அவனைப் பற்றி எல்லாம் கேட்கலாமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் தாளித்து எடுத்தார் அமைச்சர் காந்தி. அதற்கு, நான் காந்தி எடுத்த வாந்தியை வரவேற்கிறேன் பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது செய்தியாளர்கள் அவரிடம்,   திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கொந்தளித்து வருகிறாரே அண்ணாமலை என்று கேள்வி எழுப்பினர்.  அதற்கு ஆவேசமான காந்தி,   அவன் எல்லாம் ஒரு தலைவனா அவனைப் பற்றி கேட்கலாமா?  வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறான்.  படித்தவனைப் போல பேச வேண்டாம்.  பதவி என்பது சில காலம் தான்.  மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான்... என்று அண்ணாமலையை ஒருமையில் தாளித்து எடுத்தார்.

இந்நிலையில்,  நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 23000 விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்ய  வலியுறுத்தியும், விவசாயிகள் புதிதாக பயிர்க்கடன் வாங்குவதற்கு அடங்கல் தேவை இல்லை கிராம நிர்வாக அலுவலர் எழுதிக்கொடுக்கும் அறிக்கையே போதும் என்பதை வலியுறுத்தியும் விவசாய  முன்னேற்ற கழகத்தின் சார்பாக இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

தமிழக அரசு மற்ற மாவட்டங்களில் உள்ளது போல நாமக்கல் மாவட்டத்திற்கும் அதே நடைமுறையை  அமல்படுத்த வேண்டுகிறேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.  “அரசியலில் இப்படி பேசுவது எல்லாம் சகஜம் தான்.  ஆனால் காந்தி என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி வாந்தி எடுக்கிறார்.  இவர்கள் செய்யும் விமர்சனங்களால் பாஜக  அடுத்த கட்டத்திற்குப் போய்விட்டது.  இதனால்தான் திமுக அமைச்சர்கள் இப்படி பொறுமை இழந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் வலையில்  திமுக அமைச்சர்கள் விழ ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்கள் ஒருமையில் பேசணும்.  அப்போதுதான் எங்கள் கட்சி அடுத்த லெவலுக்கு போகும்.  அதனால் தான் காந்தி எடுத்த வாந்தியை வரவேற்கிறேன் ’’என்றார் அண்ணாமலை.

 அவர் மேலும்,  ‘’ என்னுடைய பதில் எப்போதும் ஆக்ரோஷமாக காட்டமாக இருக்குமே தவிர அநாகரிகமாக  இருந்தது இல்லை.  எதற்காக ஒவ்வொரு அமைச்சருக்கும் இப்படி கோபம் வருகிறது? எங்களை அநாகரிகமாக பேசுகிறார்கள்?’’ என்று கேட்டார்.