நெடுமாறன் அறிவிப்பில் இருக்கும் மூன்று ஆபத்துகள் -பெ.மணியரசன்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவர் நலமுடன் உள்ளார். அவருடைய துணைவியாரும் நலமுடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததில் மூன்று ஆபத்துகள் உள்ளன என்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்பெ. மணியரசன்.
அதுகுறித்து அவர் அறிக்கை மூலம் விளக்கி இருக்கிறார். தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் அவர்களும், தமிழீழப் பாவலர் காசி. ஆனந்தன் அவர்களும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி , தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர் துணைவியார் மதிவதனி அவர்களும் மகள் துவாரகா அவர்களும் உயிருடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார். தமிழ் ஈழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘தலைமறைவிலிருந்து’ வெளி வந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கட்கு, அவரது இந்த இலட்சியத் திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும்? என்று கேள்வி எழுப்பும் மணியரசன்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்திலும், அது செயல்படாத பிற்காலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள் - நிலைபாடுகள் - முடிவுகள் முதலியவற்றை வெளியிடும் அதிகாரத்தை இவ்விருவருக்கும் அவ்வமைப்பு வழங்கியதில்லை. கவிஞர் காசி ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ்., பாசகவின் ஆரியத்துவா, அதாவது அவர்களின் இந்துத்துவா கொள்கையை ஆதரித்து, பாசக ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமிழீழத் தமிழர்களின் அரசியல், இறையாண்மை மற்றும் உரிமைகளை மீட்கப் போவதாக அறிவித்துச் செயல்பட்டு வருபவர். கவிஞரின் இந்நிலைபாட்டை எள்ளளவும் ஆதரிக்காத தமிழ்நாட்டு தமிழீழ ஆதரவு அமைப்புகள் பல உள்ளன. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கவிஞரின் இந்நிலைபாட்டைத் தொடக்கத்திலிருந்து மறுத்து வருகிறது.
கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் குரலுக்கு இப்போது தமிழ் ஈழமக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது முதன்மையான வினாக்குறி! அவரைத் தமது பேச்சாளராக தலைவர் பிரபாகரன் தேர்வு செய்தாரா என்பது அடுத்த வினாக்குறி என்கிறார்.
பழ. நெடுமாறன் அவர்கள் 2009 மே 18 லிருந்து பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று உயிரோடிருக்கிறார் என்று கூறிவருகிறார். 2009 மே 18 அன்று தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு படம் போட்டுக் காட்டி அறிவித்தது. அப்போது கொந்தளித்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் - நான் உட்பட - தமிழ்நாட்டில் முழுக்கடையடைப்பு நடத்த கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். அடுத்த நிமிடமே பிரபாகரன் உயிரோடு தப்பிச் சென்றுவிட்டார் என்று நெடுமாறன் ஐயா அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு காசி ஆனந்தன் மூலம்தான் எனக்குத் தெரிந்தது. மறு ஆண்டு 2010 நவம்பர் 27 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கு - சிற்றரங்கில் நடந்த மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ஐயா நெடுமாறன், “அடுத்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வைத் தலைவர் பிரபாகரன் வெளிவந்து நடத்துவார்” என்று அறிவித்தார். அதன் பிறகு இன்றுவரை தலைவர் வரவில்லை என்று சொல்லும் மணியரசன்,
ஈழத்தமிழர் இனப்படுகொலையில் பல வடிவங்களில் பங்கெடுத்த இந்திய அரசுக்கு எதிராக கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆவேசம் கொண்ட அந்த வேளையில், அந்த ஆவேசத்தை ஓரளவு தணிப்பதற்கே நெடுமாறன் அவர்களின் “தலைவர் உயிரோடு இருக்கிறார்” என்ற அறிவிப்பு பயன்பட்டது. இப்பொழுது நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது என்கிறார்.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை, இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார் என்று பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். சீனா இலங்கையில் காலூன்றுவதையும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க்காலத்திலும் அதன் பிறகும் இன்று வரை இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்குத் துணையாகவே செயல்பட்டு வருகிறது. காங்கிரசு ஆட்சியிலும் பாசக ஆட்சியிலும் இதுதான் உண்மை நிலை என்று சொல்லும் மணியரசன்,
இலங்கை வழியாக சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றும் நெடுமாறன் தமது அறிக்கையில் கூறியுள்ளார். மேற்கண்ட அறிக்கை மற்றும் பழ. நெடுமாறன் அவர்களின் கூற்று ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஏற்கெனவே கவிஞர் காசி ஆனந்தன் குழுவினர், பாசகவை ஆதரித்து ஈழ மக்கள் உரிமைகளை மீட்கலாம் என்று கூறிய திட்டத்தை பழ. நெடுமாறன் வலியுறுத்துகிறார் என்று தெரிகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றம்- சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க முன்வந்த போதெல்லாம் அதற்கு எதிராகச் செயல்பட்டது இந்திய அரசு என்பதே வரலாறு. காங்கிரஸ் ஆட்சியும், பாசக ஆட்சியும் இதில் ஒரே நிலைதான் எடுத்தது என்கிறார்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாசக ஆரியத்துவா ஆட்சியை ஆதரித்து பாதாளப் படுகுழியில் விழக் கூடாது என்பதை நாம் எச்சரித்துக் கூறுகிறோம். கவிஞரும் பழ. நெடுமாறனும் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை எனச்சொல்லும் மணியரசன்,. இது மூன்று வகையில் ஆபத்தானது என்கிறார். அதுகுறித்து அவர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் தமிழின உணர்வை, தமிழ்த்தேசிய உணர்வை மடைமாற்றி, பாசகவின் பக்கவாத்தியமாக திசைமாற்றும் உத்தி இரண்டாவதாகத் தெரிகிறது.
மூன்றாவதாக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆர். அரிகரன், “நெடுமாறன் அறிக்கை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியர்களை உசுப்பிவிட்டு, பிரபாகரன் ஆதரவைப் பெருக்கிவிட வாய்ப்பளிக்கும்” என்கிறார். அதாவது இதன் மூலம் தமிழின உணர்வாளர்கள் மீது அரசு அடக்கு முறையை ஏவிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது. இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்க நெடுமாறன் அவர்கள் அறிக்கை வாய்ப்பளிக்கும் என்கிறார்.
இன்னொரு கெடுவாய்ப்பும் இருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் இல்லாத 13-வது சட்ட திருத்தத்தை இந்தியாவின் அழுத்தத்தோடு ஈழத் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களுக்குத் தன்னாட்சி கொடுத்துவிட்டதாக சிங்கள அரசு பசப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் மணியரசன், தக்க சான்றுகள் இல்லாமல், தலைவர் பிரபாகரன் வரப்போகிறார் என்று நெடுமாறன் அவர்களும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் கூறுவதை அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை. தமிழ் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இன உணர்வாளர்கள் - உரிமை மீட்பாளர்கள் தங்கள் சிந்தனையைச் சிதறவிடாமல் பணிகளைத் தொடர்வதே சரியாக இருக்கும் என்கிறார் அழுத்தமாக