×

வேட்பாளர் பெயரையே சொல்லாமல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பாராம்... ஓபிஎஸ்-ஐ கிண்டல் செய்த டிடிவி

 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தீய சக்திகளுக்கும் ஆதரவு கிடையாது , துரோக சக்திகளுக்கும் ஆதரவு கிடையாது என திமுக , அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். 

சென்னையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “1968-ல் இயற்றப்பட்ட கட்சிகளின் சின்னங்களுக்கான விதிப்படி பதிவு பெற்ற கட்சிகள்  இரு பொதுத்தேர்தலில் ஒரே சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம். எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில்  போட்டியிட அமமுகவிற்கு எந்த தடையுமில்லை.

கேட்ட சின்னம் கிடைக்காததால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது போல, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியையும் புறக்கணத்துள்ளோம். சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாமா..? குக்கர் சின்னத்திற்காக உச்ச நீதிமன்றத்தை நாடலாமா..? என யோசித்தேன். ஆனால் நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெறுவதற்கு போதுமான நேரம் இல்லை என்பதால்  நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறி விட்டனர். 


இரட்டை இலை கிடைத்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது, தீயவர்கள் கையில் இரட்டை இலை உள்ளது , இரட்டை இலைக்கு இனி சக்தி இருக்காது, பழனிசாமி கம்பெனியால் வெற்றி பெற முடியாது. நாங்கள் பெரிய கட்சி கிடையாது, நல்ல வாக்கு சதவீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தோம், வெற்றிக்காக அல்ல. பாஜகவுடன் இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்பதால் தேர்தலை புறக்கணிக்கவில்லை, சின்னம் ஒதுக்காகதது மட்டுமே புறக்கணிப்பிற்கு காரணம்.

எங்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காததாற்கு அரசியல் காரணம் இருங்காது. ஈரோடு கிழக்கில் திமுகவினர் பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர். பங்காளிகளான ஈபிஎஸ், ஓபிஎஸ், இப்போதுதான் தங்களிடம் உள்ள  பணத்தை செலவழிக்க தொடங்கி உள்ளனர், மக்களிடம் பெற்ற வரிப்பணத்தை வாக்குகளுக்கு பணமாக இப்போது கொடுக்கின்றனர். பன்னீர் செல்வம் எனது முன்னாள் நண்பர் , எனக்கு அவர் மீது பிரியம் உண்டு. ஆனால் அவரது நிலைப்பாடு குறித்து நான் கருத்து கூற முடியாது. என் முடிவு திமுகவிற்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதற்காக நான் அதிமுகவின் எடப்பாடி கம்பெனியை ஆதரிக்க முடியுமா..? 

வேட்பாளர் பெயரை சொல்லாமல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்போம் எனும் பன்னீர் செல்வம் அணியின் நிலைப்பாடு எனக்கு சிரிப்பாக உள்ளது , இதுபோல மற்றவர்கள்  எள்ளி நகையாடும் விதமாக  கடவுள் கிருபையால் நான் நடந்து கொண்டதில்லை” எனக் கூறினார்.