"சிபிஎஸ்இ வினாத்தாளில் பெண்ணடிமைத்தனம்; பிற்போக்கு கருத்துகள்" - சீறும் டிடிவி தினகரன்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக்கூடிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும். வழக்கமாக பாடத்திட்டத்தில் தான் தேவையற்ற கருத்துகளை இணைத்து பெரும் சர்ச்சைகளுக்கு வித்திடும். தற்போது வினாத்தாளில் அதைச் செய்திருக்கிறது. வினாத்தாளில் அமைந்துள்ள ஒரு கேள்வியில், "இப்போதெல்லாம் மனைவிமார்கள் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை. குடும்பத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாவதால் பெற்றோர் என்ற கட்டமைப்பை அவர்கள் அழிக்கிறார்கள்.
முன்பெல்லாம் ஆண்களுக்கு கீழ்படிந்து நடந்தார்கள். இப்போது அப்படி இல்லை. அதனால் அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் ஒழுங்கீனமாக வளர்கின்றன” என இடம்பெற்றுள்ளது. இந்த பாராவுக்கு தலைப்பு வைக்க வேண்டும் எனக்கூறி நான்கு ஆப்சன்களையும் வழங்கப்பட்டுள்ளது. அதில், "குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல்” என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார். பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கொந்தளித்துள்ளார். அடிக்கடி இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.