பால்டாயில் உதயநிதி! ஒத்தக்கல்லு உதயநிதி! நடிகை விந்தியா கடும் தாக்கு
மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. ஆனால் அதன் பின்னர் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்கின்றன. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒத்த செங்கல்லை தூக்கிக்கொண்டு இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை.. எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லி பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
மதுரையில் ஒரு செங்கல்லை வைத்து பூஜை நடத்தி இருந்தார்கள். அந்த ஒத்த செங்கல்லையும் நான் தூக்கி வந்து விட்டேன். பாருங்கள் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதே ஒத்தக்கல்லை தூக்கி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் . அந்த ஒத்தக் கல்லில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள் இதுதான் மத்திய அரசு மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று காட்டுகிறார் .
இதற்கு அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார். கருங்கல்பாளையம், குயிலன் தோப்பு, கிருஷ்ணம்பாளையம், கனிராவுத்தர் குளம் ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்து தென்னரசுவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகிறார்.
பிரச்சாரத்தின் போது அவர், தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் கள ஆய்வு செய்வது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பினார்.
அவர் மேலும், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை, வேங்கவயல் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த பிரச்சனை, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை ,கோவை தென்காசியில் படுகொலை என்று சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தற்போது மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாது நிலை இருக்கிறது. நிம்மதியும் மக்களுக்கு இல்லை . இந்நிலையில் இந்த முறையும் ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். அவரை ஒத்தக்கல் உதயநிதி ஸ்டாலின் என்று சொல்லுங்கள் . பால்டாயில் உதயநிதி ஸ்டாலின் என்று விரட்டி அடியுங்கள். மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை . அதனால் ஒத்தக்கல் உதயநிதி ஸ்டாலின் என்று சொல்லி விரட்டி அடிங்கள் என்றார்.