×

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த 25 ஆண்டுகள் வீணானது.. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசம்
 

 

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த 25 ஆண்டுகள் வீணானது என்று நான் நம்புகிறேன் என்று சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சிவ சேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வரும், அந்த கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: நாம் அவர்களுக்கு (பா.ஜ.க.) ஆதரவளித்தவர்கள். நாம் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தோம். பா.ஜ.க. இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியது. நாம் பா.ஜ.க.வை விட்டு வெளியேறினோம். ஆனால் இந்துத்துவாவை விட்டு வெளியேற மாட்டோம். பா.ஜ.க. இந்துத்துவா அல்ல. நாங்கள் அவர்கைள சவால் செய்த போது எங்களுக்கு எதிராக தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

சிவ சேனா கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த 25 ஆண்டுகள் வீணானது என்று நான் தொடர்ந்து நம்புகிறேன்.  அரசியல் ரீதியாக வளர்ந்து வரும் போது தேர்தலில் பா.ஜ.க. பல இடங்களில் டெபாசிட் இழந்தது. அந்த நேரத்தில் சிவ சேனா உள்பட பல  பிராந்திய கட்சிகளுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தது. இந்துத்துவாவுக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் பா.ஜ.க.வுடன் சிவ சேனா கூட்டணி வைத்தது. சிவ சேனா ஒரு போதும் அதிகாரத்திற்காக இந்துத்துவாவை பயன்படுத்தவில்லை.

எங்களை தனியாக தேர்தலில் போட்டியிட அமித் ஷா சவால் விடுத்தார். நாங்கள் தனியாக போராட தயாராக இருக்கிறோம். அவர்களின் (பா.ஜ.க.) தேசிய அபிலாஷைகளை நிறைவேற்ற பா.ஜ.க.வை நாங்கள் முழு மனதுடன் ஆதரித்தோம். மகாராஷ்டிராவில் நாங்கள் தலைமை தாங்கும்போது அவர்கள் தேசிய அளவில் செல்வார்கள் என்பது புரிந்துணர்வு. ஆனால் நாங்கள் காட்டி கொடுக்கப்பட்டோம், எங்கள் வீட்டில் (மகாராஷ்டிராவில்) எங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் நாங்கள் பதிலடி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி) கொடுக்க வேண்டியிருந்தது.