×

ஆளுநரை எதிர்த்து உங்களால் மூச்சு விடமுடிகிறதா? - ஈபிஎஸ்க்கு உதயநிதி கேள்வி

 

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட முடியாது எனக்கூறிய ஆளுநர் ரவிக்கு எதிராக அதிமுக இதுவரை ஒரு கண்டனமாவது தெரிவித்ததா? ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரை எதிர்த்து அதிமுகவால் ஒரு மூச்சு விட முடிந்ததா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வை ரத்து செய்ய புதிதாக எதையும் திமுக அரசு செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு பிரச்சனையை திமுக எழுப்பவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு செயல்பட முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக தொடர்ந்து ஏமாற்றிவருகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், “உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவின் பிரதிநிதிதானே ஆளுநர். அவர் நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் என பெற்றோரிடமே தெரிவிக்கிறார். அவரை எதிர்த்தோ, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்தோ உங்களால் மூச்சுவிட முடிகிறதா? நாங்கள் தைரியமாக எதிர்ப்பை தெரிவிக்கிறோம். சட்ட போராட்டத்தை மேற்கொண்டுவருகிறோம். உங்களால் ஒரு கண்டனமாவது தெரிவிக்க முடிந்ததா? நீட் தெர்வுக்கு எதிராக மாணவர்கள் பக்கம் திமுக நிற்கும். சட்டப்போராட்டம் தொடரும். சென்னையில் ‘ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் 2023’ போட்டிகள் டிசம்பரில் நடக்கும். செஸ் ஒலிம்பியாட், சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை, சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை தொடர்ந்து அனைத்து சர்வதேச போட்டிகளும் நடக்கும் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளது” என்றார்.