×

இன்னும் 20 நாளில் இரட்டை இலை எங்கள் வசமாகும்- வைத்திலிங்கம்

 

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டுமே வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என அதிமுக முன்னாள அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுக மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒன்று சேர வேண்டும்.  பிரிந்திருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் அப்போது தான் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற முடியும், இல்லையெனில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெற முடியாது. தற்போது எடப்பாடி அணியில் இருப்பவர்களும் சிந்திக்க தொடங்கி விட்டனர். திருச்சியில் 3 லட்சம் நபர்களை வைத்து மாநாடு நடத்தினோம். விரைவில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. இன்னும் 20 நாளில் நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது. அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதன்பிறகு இரட்டை இலை எங்கள் வசமாகும்

எடப்பாடி பழனிச்சாமி ஒத்து வந்தால் ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றிக்கடன், இல்லையென்றால் அவரை ஒதுக்கிவிட்டு அதிமுகவை ஒன்று சேர்ப்போம். அரசியல் அனாதை  வைத்தியலிங்கம் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அரசியலில் அனாதை என்பது அரசியல் பற்றி தெரியாதவர்கள் சொல்வது. அரசியலில் அனாதை என்பதை சொல்ல அந்த ஆளுக்கு தகுதி இல்லை. டிடிவி தினகரன் வீட்டில் வேலை செய்தவர் காமராஜ். ஓபிஎஸ்-ஐ ஜல்லிக்கட்டு நாயகன் என அழைத்ததே இபிஎஸ்தான். எங்கள் தொண்டர்களை  தாக்கி ஒரு சொட்டு ரத்தம் வந்தால், அவர்கள் மீது 10 சொட்டு ரத்தம் வரும். பதவிக்காக யார் கால்களிலும் நாங்கள் விழுந்தது இல்லை. 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை நாங்கள் வரவேற்கிறோம்” எனக் கூறினார்.