புரிஞ்சவன் பிஸ்தா! வாரிசு - துணிவு அரசியல்
அஜீத் - விஜய் திரையில் மோதிக்கொள்வது ஒருபுறம் இருக்க, அவர்களை வைத்து வலைத்தளத்தில் திமுகவும் பாஜகவும் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுதுதி வருகின்றன.
நடிகர்கள் அஜித்தும் விஜய்யும் தங்கள் படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்து தங்களின் பலத்தை நிரூபித்து வருகின்றனர். அஜித் தனது துணிவு படத்தையும், விஜய் தனது வாரிசு படத்தையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்து இருக்கின்றனர். அவர்களிடையே நிலவும் போட்டி அவர்களது ரசிகர்கள் இடையேயும் நிலவி வருகிறது.
அஜித்- விஜய் ரசிகர்கள் துணிவு -வாரிசு திரையிட்ட திரையரங்குகளில் திரண்டு தங்களது பலத்தை நிரூபித்து வருகின்றனர். இந்த மோதல் ஒரு புறம் இருக்க, துணிவு- வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை வைத்து திமுகவும் பாஜகவும் ட்விட்டர் தளத்தில் மோதிக்கொண்டிருக்கின்றன.
’’ரவீந்தர் இது தமிழ்நாடு.. உங்க வேலையை இங்கே காட்டாதீங்க’’என்று துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை வைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை பார்த்து திமுக எச்சரிக்கும் விதமாக டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் திமுகவினர். அதே நேரம், #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் என்று வாரிசு படத்தில் விஜய் பேசும் டயலாக்கை வைத்து அண்ணாமலை நினைத்தால் ஐந்து நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்று திமுகவை எச்சரிக்கும் விதத்தில் பாஜகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே திமுகவுக்கும் அண்ணாமலைக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், 40 யானை வந்தாலும் எதிர்த்து நிக்குற சிங்கம்டா.. நாலு பேர பார்த்து பயப்படுற கோழை இல்ல.. என்று அண்ணாமலை திமுகவை பார்த்து சொல்வது போல் வீடியோவை பரப்பி வருகின்றனர் பாஜகவினர்.
ஸ்டாலினுக்கு வாரிசு என்றும், அண்ணாமலைக்கு துணிவு என்றும் எழுதி பரப்பி வருகின்றனர் பாஜகவினர்.