×

பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்.. வருண் காந்தி, மேனகா காந்தியை கழட்டி விட்ட பா.ஜ.க.
 

 

உத்தர பிரதேச தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வருண் காந்தி, மேனகா காந்தி ஆகியோர் இடம் பெறவில்லை.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரில் 10ம்  தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் கட்ட உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட மொத்தம் 30 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

அதேசமயம் பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், பா.ஜ.கவின் பிரபல எம்.பி.க்களான வருண் காந்தி மற்றும் அவரது தாயார் மேனகா காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. சுல்தான்பூர் மற்றும் பிலிபித் ஆகிய தொகுதிகளில் அவர்கள் இருவரும் பலமுறை வெற்றி பெற்றவர்கள். மேலும் மக்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நபர்களை நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் பா.ஜ.க. தலைமை சேர்க்காதது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாக குழுவின் பட்டியலிலிருந்தும் வருண் காந்தியும், மேனகா காந்தியும் கழட்டி விடப்பட்டனர். விவசாயிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க. தலைமைக்கு எதிராக வருண் காந்தி குரல் கொடுத்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் வருண் காந்தி மற்றும் மேனகா காந்தியை பா.ஜ.க.  சேர்க்காதது,  அவர்களை அந்த கட்சி ஒரங்கட்டுவது போல் தெரிகிறது என்று கருத்து நிலவுகிறது.