எதற்கு முன்னுரிமை.. கொரோனாவை கட்டுப்படுத்துவதா அல்லது தேர்தலின் போது பலத்தை காட்டுவதா?.. வருண் காந்தி
நமது முன்னுரிமை ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதா அல்லது தேர்தலின் போது அதிகாரத்தை காட்டுவதில் ஈடுபடுவதா என்பதை நாம் நேர்மையாக தீர்மானிக்க வேண்டும் என்று வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு அளவுக்குள் உள்ளது. இருப்பினும், தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வருண் காந்தி கூறியதாவது: பகலில் லட்சக்கணக்கான மக்களை கூட்டி விட்டு இரவில் ஊரடங்கு சட்டத்தை விதிப்பது சாமானியனின் அறிவை காட்டிலும் மிகவும் குறைந்தது.
உத்தர பிரதேசத்தின் வரையறுக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பை மனதில் வைத்து, நமது முன்னுரிமை கொரோனா வைரஸின் ஆபத்தான ஒமைக்ரான் மாறுபாட்டை கட்டுப்படுத்துவதா அல்லது தேர்தலின் போது அதிகாரத்தை காட்டுவதில் ஈடுபடுவதா என்பதை நாம் நேர்மையாக தீர்மானிக்க வேண்டும். இரவில் சாலையில் மக்கள் குறைவாக இருப்பதால், பகலில்தான் தொற்றுநோய் அதிகம் பரவுகிறது. மேலும் கோவிட் அதிகம் வெளிப்படும் என்பதால் சமூக கூட்டங்களை கடுமையாக குறைக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அம்மாநில அரசு 2021 மார்ச் மாதத்தில் இரவு ஊரடங்கு, வார இறுதி லாக்டவுன் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அந்த நடவடிக்கைகள் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தின. எனவே நிர்வாகம் கடுமையான மற்றும் பயனுள்ள கட்டுப்பாட்டு மூலோபாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.