×

தெலங்கானா சட்டசபை தேர்தலில் விசிக போட்டி- திருமாவளவன்

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெலங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு மட்டுமின்றி, தனது கட்சியை அண்டை மாநிலங்களுக்கும் விரிவு படுத்துவரும் திருமாவளவன், அண்மையில் ஆந்திராவில் பல மாவட்டங்களில் கட்சியின் கிளை அலுவலகங்களை திறந்தார். தொடர்ந்து விஜயவாடாவிலும் அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆனால் அங்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து களம் காணுமா அல்லது ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதிக்கு ஆதரவு தெரிவிக்குமா என்பது தெரியவில்லை.

முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்வம் காட்டியது. தமிழ்நாட்டில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, கர்நாடகாவிலும் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைகிறது. தென்னிந்திய மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான ஒரு கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் விரிவு செய்துவருவது குறிப்பிடதக்கது.