×

"அப்படி என்ன உங்களுக்கு ஆணவம்" - மத்திய அரசு மீது பாய்ந்த வேல்முருகன்!

 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். ஆனால் இம்முறை அதனை நிராகரித்துள்ள மத்திய அரசு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் விசித்திரமாக இருக்கிறது. அதாவது அலங்கார ஊர்தியில் இருக்கும் வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார் ஆகியோர் பிரபலமில்லாத தலைவர்கள் எனவும், அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்பதாலும் நிராகரிப்பதாக சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்த விடுதலைப் போராட்ட ஈகியரில் முதன்மையானவர்கள் தமிழர்கள். விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு வேறெந்த மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் அதிகமானதாகவே உள்ளது. சிவகங்கைச் சீமையில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதும், தமிழகத்தில் சுதந்திர வேட்கையை வளர்த்தது. தூத்துக்குடி-கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மாமனிதர் வ.உ.சிக்கு, வெள்ளையர்கள் அளித்த சிறை தண்டனை மிகக் கொடுமையானது. 

முக்கியமாக, தமிழ்நாடு வீரத்திற்கும், தியாகத்திற்கும் முன்னோடி என்பதை சுதந்திர போராட்டத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இச்சூழலில், டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வகையில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப் படங்கள் அடங்கிய ஊர்தி, தமிழ்நாடு அரசு சார்பில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.

கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிகிறது என்றும் வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது எனவும் ஆணவத்துடன் பதிலளித்துள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது தமிழ்நாட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே, தமிழின விரோதப் போக்கை கைவிட்டு, குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை, இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.